Sunday, June 26, 2011

சுதந்திர அணிவகுப்பு நெல்லையில் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயற்குழு முடிவு


                 பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு கூட்டம் ஜூன் 19, 20 ஆகிய தேதிகளில் குற்றாலத்தில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் அவர்கள் தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஆகஸ்ட்15, 2011 சுதந்திர தினத்தை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட்டின்... சுதந்திர தின அணிவகுப்பினை திருநெல்வேலியில் நடத்துவது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
 

தீர்மானங்கள்:

1. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடந்த 3 வருடங்களாக ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின கொண்டாட்டங்களையும், சுதந்திர தின அணிவகுப்பையும் (FREEDOM PARADE) நடத்தி வருகின்றது. இந்த வருடம் ஆகஸ்ட்15, 2011 அன்று சுதந்திர அணிவகுப்பை நெல்லையில் நடத்துவது எனவும், சுதந்திர தின கொண்டாட்டங்களை நெல்லை உட்பட தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

2. முஸ்லிம்களின் உரிமையான இடஒதுக்கீடு முஸ்லிம்களின் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப வழங்க வேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட் பல கருத்தரங்குகள் மற்றும் போராட்டங்களை நடத்தி அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசிடம் தமிழக முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் எனவும், முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து இக்கோரிக்கையை முன்வைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

3. கல்வி இன்று வியாபாரமயமாகிவிட்டது. அனைவரும் அறிந்த உண்மை இது. இன்ஜினியரிங் கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதும், எல்.கே.ஜி. யில் குழந்தைகளை சேர்ப்பதும் ஒன்றாகி விட்டது. பள்ளிக்கட்டணங்களை முறைப்படுத்துவதற்கு கடந்த கால அரசு நியமித்த கோவிந்தராஜன் குழு பள்ளிக்கட்டணங்களை முறைப்படுத்தியது.அதில் குளறுபடிகள் இருப்பதாக புகார் வந்ததின் அடிப்படைடியில் மீண்டும் நீதிபதி ரவிராஜ பாண்டியன் குழு அமைக்கப்பட்டு கட்டணங்கள் மறு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், மறு நிர்ணயம் செய்யப்பட்ட கட்டண விபரம் தொடர்பாக அரசும், தனியார் பள்ளிகளும் எந்த விபரத்தையும் வெளியிடாமல் மௌனம் காத்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதும், மாணவர்களை துன்புறுத்துவதும் தினசரி செய்தியாகி விட்டது. இது விஷயத்தில் அரசு உடனடியாக தலையிட்டு பள்ளிக்கட்டணத்தை சீர்செய்து அதனை பின்பற்றாத பள்ளிகளின் மீது கடும் நடவடிக்கை எடுத்து மாணவர் நலன் காக்க வேண்டும் என இச்செயற்குழு கேட்டுக் கொள்கின்றது.

4. கோவையில் கடந்த 2006 ம் ஆண்டு அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீது போடப்பட்ட வெடிகுண்டு பறிமுதல் வழக்கு, உளவுத்துறை ஏ.சி. ரத்தினசபாபதியின் நாடகம் என்பதும், அது முற்றிலும் அப்பட்டமான பொய் வழக்கு என்றும் அதில் உள்ள ஆவணங்கள் காவல்துறையினராலேயே போலியாக தயாரிக்கப்பட்டவை என்றும் சி.பி.சி.ஐ.டி.யின் சிறப்பு புலனாய்வுக் குழு கோவை ஏழாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் கடந்த 2007ம் ஆண்டு இறுதி அறிக்கை தாக்கல் செய்தது.

சிறப்புப் புலனாய்வு குழுவால் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு அந்த அறிக்கையின் அடிப்படையில் ஏ.சி. ரத்தினசபாபதி மற்றும் உடந்தையாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது முந்தைய தி.மு.க. அரசு கிரிமினல் வழக்கு பதிவு செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு தண்டனை பெற்று தந்திருக்க வேண்டும். ஆனால், நடவடிக்கைக்கு பதிலாக ஏ.டி.எஸ்.பி, அதன் பிறகு கடந்த மாதம் எஸ்.பி. என பதவி உயர்வுக்கு மேல் பதவி உயர்வை கிரிமினல் குற்றம் சாட்டப்பட்ட ஏ.சி. ரத்தின சபாபதிக்கு தமிழக அரசு வழங்கியது நடுநிலையாளர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும், ஏ.சி. ரத்தின சபாபதி கடந்த தி.மு.க. அரசால் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினராகவும் நியமனம் செய்யப்பட்டார்.

            அநீதி இழைக்கப்பட்டு 5 வருடங்களை கடந்தும் பொய்வழக்கால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை; பொய் வழக்கு புனைந்த அதிகாரிகள் மீது எந்த விதமான நடவடிக்கையும் இதுநாள் வரை எடுக்கப்படவில்லை. எனவே, தமிழகத்தில் தற்போது ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் அ.தி.மு.க. அரசு உடனடியாக இது விஷயத்தில் தலையிட்டு ஏ.சி. ரத்தின சபாபதிக்கு வழங்கப்பட்ட இரண்டு பதவி உயர்வுகளையும் ரத்து செய்ய வேண்டுமெனவும், டி.என்.பி.எஸ்.சி, உறுப்பினர் பதவியையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

                  மேலும், எஸ்.ஐ.டி. சமர்பித்துள்ள இறுதி அறிக்கையின் அடிப்படையில் ஏ.சி. ரத்தினசபாபதி மற்றும் அவருக்கு துணை புரிந்த அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறும், அவர்களுக்கெதிரான கிரிமினல் வழக்கை நடத்துவதற்காக சிறப்பு அரசு வழக்கறிஞரை நியமித்து அரசே அவ்வழக்கினை நடத்தி அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தரவேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென்றும் தமிழக அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது

Saturday, June 25, 2011

பெண்கள் பள்ளிக்குச் செல்வதை நபி(ஸல்) அனுமதித்தார்கள்

                     ‘உங்கள் மனைவியர் பள்ளிவாசலுக்குச் செல்ல அனுமதி கேட்டால் அவர்களைத் தடுக்காதீர்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
                -அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)...நூல்கள்: புகாரீ 5238, முஸ்லிம் 666 
 
                  முஃமினான பெண்கள் தங்களின் ஆடைகளால் போர்த்திக் கொண்டு நபி (ஸல்) அவர்களுடன் ஃபஜ்ருத் தொழுகையில் பங்கெடுப்பவர்களாக இருந்தனர். தொழுகை முடிந்ததும் தங்களின் இல்லங்களுக்குத் திரும்புவார்கள். இருட்டின் காரணமாக அவர்களை ஒருவரும் அறிந்து கொள்ள முடியாது.
                     அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)நூல்கள்: புகாரீ 578, முஸ்லிம் 1021 
 
          ‘நீண்ட நேரம் தொழுவிக்கும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குகின்றேன். அப்போது குழந்தையின் அழுகுரலை நான் கேட்கிறேன். (எனக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கும்) அந்தக் குழந்தையின் தாயாருக்குச் சிரமமளிக்கக் கூடாது என்பதால் தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகிறேன்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
                    அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி) நூல்: புகாரீ 707 
 
                 காஃப் வல்குர்ஆனில் மஜீத்’ என்று துவங்கும் அத்தியாயத்தை நபி (ஸல்) அவர்களின் நாவிலிருந்து தான் மனனம் செய்தேன். அதை அவர்கள் ஒவ்வொரு ஜுமுஆவிலும் மிம்பரில் மக்களுக்குச் சொற்பொழிவு நிகழ்த்தும் போது ஓதுவார்கள்.
                         அறிவிப்பவர்: உம்மு ஹிஷாம் (ரலி) நூல்: முஸ்லிம் 1442 
 
                       உமர் (ரலி) அவர்களின் மனைவியரில் ஒருவர் ஸுப்ஹ் மற்றும் இஷாத் தொழுகைகளில் பள்ளியில் ஜமாஅத்தில் கலந்து கொள்வார். அவரிடம், ‘(உங்கள் கணவர்) உமர் (ரலி) ரோஷக்காரராகவும், இதை விரும்பாதவராகவும் இருப்பதைத் தெரிந்து கொண்டே நீங்கள் ஏன் (பள்ளிக்குச்) செல்கிறீர்கள்?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அப்பெண்மணி, ‘அவர் என்னைத் தடுக்கக் முடியாது. ஏனெனில் பெண்கள் பள்ளிக்குச் செல்வதை நீங்கள் தடுக்காதீர்கள் என்ற நபி (ஸல்) அவர்களின் சொல் (என்னைத் தடுப்பதை விட்டும்) அவரைத் தடுத்து விடும்’ என்று கூறினார்.
                        அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)நூல்: புகாரீ 900 
 
                  பெண்கள் பள்ளிக்கு வரலாம் என்றாலும் இரவில் பள்ளிக்கு வரும் போது நறுமணம் பூசக் கூடாது.‘
                     நறுமணம் பூசிக்கொண்ட பெண் நம்முடன் இஷாத் தொழுகையில் கலந்து கொள்ள வேண்டாம்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
                         அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 675
 
Thanks for :
           Banu Ahamed

Wednesday, June 22, 2011

இறையில்லங்கள் தொழுகைக்காக !

இறையில்லங்கள்






ஏக இறைவனாகிய அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்குவதற் காக எழுப்பப்பட்ட இறையில்லம் மக்கா நகரிலுள்ள புனித “கஃபா” வாகும். உலகின் இரண்டாவது பள்ளிவாசல் ( இறையில்லம் ) ஜெரூ ஸலத்திலுள்ள புனித “ பைத்துல்முகத்தஸ்” ஆகும். இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட காலம் சுமார் நாற்பதாண்டுகளாகும்.

அறிவிப்பாளர் : ஹள்ரத் அபூதர் அல்கிபாஃரி (ரளி) நூல் :முஸ்லிம் -903

இவைகளுக்குப் பின்புதான் மற்ற பள்ளிவாசல்கள் உலகில் எழுப்பப் பட்டன. இறையருளால் இன்று உலகளாவிய அளவிற்கு இலட்சக் கணக்கான இறையில்லங்கள் உள்ளன. இன்னும் இன்ஷா அல்லாஹ் உலகம் அழியக் கூடிய நாள் வரும் வரையில் இறையில்லங்கள் உருவாகிக்கொண்டே தான் இருக்கும்.

உலகிலுள்ள இறையில்லங்கள் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமாகும். யாரும் “அவை தனக்குரியது” என சொந்தம் கொண்டாட முடியாது. மனிதர்களாகிய நாம், நமது இல்லங்களை எந்தளவிற்கு சுத்தமாக, நறுமணமாக வைத்திருப்போமா அதனைவிட கண்ணியமான இடமாக இறையில்லங்களை நாம் வைத்திருக்க வேண்டும். இறை யில்லங்களுக்கு நாம் செய்ய வேண்டிய ஒழுக்கங்கள் என்னென்ன? என்பதை பார்ப்போம்.


சுத்தம் அவசியம்

“யார் தமது வீட்டிலேயே அங்கத் தூய்மை (ஒளு) செய்து விட்டு இறைக்கட்டளை (களான தொழுகை) களில் ஒன்றை நிறைவேற்று வதற்காக இறையில்லங்களில் ஒன்றை நோக்கி நடந்து செல்கிறாரோ (அவர் எடுத்து வைக்கும்) இரு காலடிகளில் ஒன்று அவருடைய தவறு களில் ஒன்றை அழித்துவிடுகிறது. மற்றொன்று அவருடைய தகுதியை உயர்த்தி விடுகிறது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஹள்ரத் அபூஹுரைரா (ரளி) நூல் : முஸ்லிம் 1184

இறையில்லத்திற்கு வரும் சமயம் தனதில்லத்திலேயே ஒளு செய்து விட்டு வரவேண்டும். அப்போதுதான், அவரது ஒரு காலடியின் மூலம் அவரின் (சிறு) தவறுகள் அழிக்கப்படுகிறது. மற்றொரு காலடியின் மூலம் அவரின் தகுதி உயர்த்தப்படுகிறது.

ஆடை சுத்தம்

தொழுகையை நிறைவேற்றுவதற்காக வரும் சமயம் சுத்தமான, அழகான, அலங்காரமான ஆடைகளை அணிந்து வர வேண்டும்.

“உமது இறைவனை (தொழுகையின் மூலம்) பெருமைப்படுத்துவீராக ! உமது ஆடைகளைத் தூய்மைப்படுத்துவீராக !

அல்குர் ஆன் (74 : 3, 4)

சிலர் திருமணம், விழா போன்ற இடங்களுக்கு செல்லும் சமயம் அல்லது அதிகாரிகளை சந்திக்கச் செல்லும் சமயம் அழகான, தூய்மை யான, இருப்பதிலேயே நல்ல ஆடைகளை அணிந்து செல்வர். அவ்வாறு அணிந்து சென்றால்தான் அங்கே நுழைவதற்கு அனுமதியும், மரியாதையும் கிடைக்கும்.

ஆனால், அதிபதிகளுக்கெல்லாம் அதிபதியாகத் திகழக்கூடிய அல்லாஹ்வை சந்தித்து, அவனுடன் உறவாட வரும் சமயம் இருப்ப திலேயே மோசமான அழுக்கான, பழைய ஆடைகளை அணிந்து வருவதை பலரும் வாடிக்கையாக ஆக்கியிருப்பது வேடிக்கையான ஒன்றாகும்.

தொழுகைக்காக வரும் சமயம் அழகான, அலங்காரமான ஆடை களையே அணிந்து வரவேண்டுமென்று அல்லாஹ் மிகத் தெளிவாகக் கூறியுள்ளான்.

“ஆதமுடைய மக்களே ! ஒவ்வொரு தொழுமிடத்திலும் உங்கள் அலங்காரத்தைச் செய்து கொள்ளுங்கள்”

அல்குர் ஆன் ( 7 :31 )

சிலர் தொழுகைக்காக வரும் சமயம் அதிக வேலைப்பாடுகள் செய்யப்பட்ட (இயற்கை காட்சிகள், கட்டிடங்கள் போன்றவை பதியப் பட்ட) ஆடைகளை அணிந்து கொண்டு தொழுகைக்காக வருகின்றனர். “இந்த ஆடைகளை அணிந்து கொண்டு தொழுவது கூடும்” என்றாலும், அணிந்துள்ளவருக்கோ, மற்றவர்களுக்கோ இந்த ஆடைகள் கவனத்தைத் திசை திருப்புமாயின் அந்த ஆடைகளை அணிவதை தவிர்த்து கொள்ளல் வேண்டும். அதிக வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஆடையைப் பற்றி நபி (ஸல்) என்ன கூறுகிறார்கள்? என்பதைப் பார்ப்போம்.

“கோடுகள் போடப்பட்ட ஒரு மேலாடையை அணிந்து நபி (ஸல்) அவர்கள் தொழுதார்கள். இதன் கோடுகள் என் கவனத்தைத் திருப்பி விட்டன” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரளி) அவர்கள்

நூல்: புகாரி 752, 373, 5817


நபி (ஸல்) அவர்களுக்கே கோடு போடப்பட்ட மேலாடை கவனம் திரும்புவதற்கு காரணமாகி விட்டபோது நாம் எம்மாத்திரம்? நமக்கு கவனம் திரும்பாவிட்டாலும் மற்றவர்களுக்கு கவனம் திரும்பாது என்பதற்கு என்ன உத்திரவாதம்? ஆகையால் என்னதான் வேலைப் பாடுகள் செய்யப்பட்ட ஆடைகளை அணியும் பழக்கம் நமக்கிருப்பினும் தொழுகைக்காக செல்லும் சமயம் முடிந்தளவு வெள்ளை நிற ஆடை களையோ அல்லது வேலைப்பாடுகள் இல்லாத ஆடைகளையோ அணிந்து செல்வது ஒழுக்கமாகும்.


வாயை சுத்தப்படுத்துதல்

துர்வாடையுடைய வெங்காயம், பூண்டு போன்றவைகள் சாப்பிடு வதற்கு ஆகுமாக்கப்பட்டவைகளாகும். ஒரு மனிதர் பசியினாலோ அல்லது மருத்துவத்திற்காகவோ வெங்காயம், பூண்டு போன்றவை களை சாப்பிட்டு அதன் வாடை வாயில் வீசும் காலமெல்லாம் பள்ளி வாசலுக்கு வரவேண்டாம் என்று நபி (ஸல்) கூறினார்கள். “ஏனெனில் அவ்வாறு அவைகளை சாப்பிட்டு விட்டு தொழுகைக்காக அணியில் (ஸஃப்) நிற்பாராயின் அவருக்கு அருகிலுள்ளவர்களுக்கு இவரது வாயிலிருந்து வெளிவரும் துர்வாடை இடையூறளிக்கும். தங்களது மனதுக்குள் வேதனைப்படுவர். அது மட்டுமன்றி வானவர்களும் இத்துர்வாடையினால் வேதனைப்படுவர்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


சிலர், தொழுகைக்காக பள்ள்க்கு வரும் சமயம் “இகாமத்” சொல்லும் வரை புகைபிடித்துக் கொண்டிருப்பர். இகாமத் சொன்னவுடன் வாயை நல்ல விதமாக சுத்தம் செய்யாமல் அணியில் சேர்ந்து கொள்வர். இதுவும் தவிர்க்கப்பட வேண்டிய ஒரு தீய பழக்கமாகும். ஏனெனில், நாம் அல்லாஹ்வுடன் நேரடியாக பேச போகிறோம். எனவே எந்த அளவிற்கு வாயை துர்வாடையை விட்டும் தற்காத்துக் கொள்ள முடியுமோ அந்த அளவிற்கு தற்காத்துக் கொள்ளல் வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “யார் இந்த (வெங்காயச்) செடியி லிருந்து சாப்பிடுகிறாரோ அவர் நமது பள்ளியை நெருங்க வேண்டாம்.

அறிவிப்பாளர் : ஹள்ரத் இப்னு உமர் (ரளி) நூல் : புகாரி (853)

மற்றொரு அறிவிப்பில்,

“யார் பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைச் சாப்பிடுகிறாரோ அவர் நமது பள்ளியை விட்டு விலகி அவரது இல்லத்திலேயே அமர்ந்து கொள்ளட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதுபோன்ற துர்வாடையுடைய உணவு பொருட்களை சாப்பிட்டு விட்டால், அது தொழுகை நேரமாக இருப்பின் நன்றாக பல் தேய்த்து வாயிலுள்ள வாடை முற்றிலும் அகன்று விடுமளவிற்கு நன்றாக வாய் கொப்பளித்து விட்டு பள்ளிக்கு வந்து கூட்டாக (ஜமாஅத்தாக) தொழ வேண்டும்.

சப்தமிட்டு பேசலாகாது

இறையில்லங்களுக்கு சென்றால் தேவையில்லாத, உலக சம்பந்த மான பேச்சுகளை முற்றிலும் தவிர்த்திடல் வேண்டும். சிலர், ஊர்கதை களை, வம்புகளை பேசுவதற்காக, புறம்பேசுவதற்காக, அரசியல் பேச இறையில்லங்களையே தேர்வு செய்கின்றனர்.

”இறைவனின் இல்லம்” என்றுகூட பாராமல் சப்தங்களை உயர்த்தி பிறருக்கு இடையூறு தருமளவிற்கு சிரித்தும், கைதட்டியும் இறை யில்லத்தின் கண்ணியத்தை கெடுத்துக் கொண்டிருப்பர். இவ்விதம் இறையில்லத்தில் சப்தங்களை உயர்த்துவது மறுமைநாளின் அடை யாளங்களில் ஒன்று” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

“நபித்தோழர் ஹள்ரத் ஸாயிப் பின் யஸீத் (ரளி) அறிவிக்கிறார்கள். “நான் பள்ளிவாசலில் நின்று கொண்டிருந்தபோது ஒரு மனிதர் என் மீது சிறு கல்லை எறிந்தார். நான் திரும்பிப் பார்த்தபோது ஹள்ரத் உமர்பின் கத்தாப் (ரளி) அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அப்போது உமர் (ரளி) அவர்கள் என்னிடம் நீ சென்று (அதோ) அந்த இருவரையும் என்னிடம் அழைத்து வா என்றார்கள். அவ்விருவரையும் அவர்களிடம் கூட்டிக் கொண்டு வந்தேன். நீங்களிருவரும் எங்கிருந்து வருகிறீர்கள்? என்று ஹள்ரத் உமர் (ரளி) அவர்கள் கேட்க “நாங்கள் தாயிஃப்வாசிகள்” என்று அவர்கள் கூறினர்.

அதற்கு ஹள்ரத் உமர் (ரளி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதருடைய பள்ளிவாசலில் சப்தங்களை நீங்கள் உயர்த்தியதற்காக நீங்கள் இவ்வூரைச் சேர்ந்தவர்களாக இருந்தால் உங்களிருவரையும் (சவுக்கால்) அடித்திருப்பேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஹள்ரத் ஸாயிப் பின் யஸீத் (ரளி) நூல் : புகாரி (470)

அவ்விருவரும் உள்ளூர் (மதீனா) வாசிகளாக இருந்திருந்தால் இறை யில்லத்தில் கண்ணியக்குறைவாக நடந்ததால் நிச்சயமாக அடி விழுந் திருக்கும். வெளியூர்வாசிகளாக இருந்ததினால் எச்சரிக்கப்பட்டு அவ் விருவரும் விடப்பட்டார்கள்.

இறைவேதத்தை படிப்பதாக இருப்பினும், இறைவனை நினைவு கூறுவதாக (திக்ரு) இருப்பினும் பிறருக்கு இடையூறு தராத வகையில் அமைதியாகவே அவைகளை செய்ய வேண்டும்.

இன்று சில இறையில்லங்களில் தொழுகை நேரத்திலும், தொழுகை யில்லாத நேரத்திலும் ஒரு கூட்டம் அமர்ந்து கொண்டு என்னதான் பேச வேண்டும்? எப்படி பேச வேண்டும்? என்ற வரைமுறையின்றி கூப்பாடு போட்டுக் கொண்டு பேசிக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது.

ஹள்ரத் உமர் (ரளி) போன்றோர் இன்றும் இருப்பின் இவர்களுக்கு “சவுக்கால்” கடுமையான தண்டனை கொடுப்பார்கள். இறையில்லங் களில் கண்டகண்ட இடங்களில் எச்சில் துப்புவது, குப்பைகளை கொட்டுவது, வீணான கவிதைகளை இயற்றுவது, பாடுவது, வீண் விளையாட்டுகள் விளையாடுவது போன்றவை கூடவே கூடாது.

இரண்டு ரக்அத் தொழுகை

“உங்களில் எவரும் பள்ளிவாசலுக்குச் சென்றால் உட்காருவதற்கு முன்பு இரண்டு ரக்அத்துகள் தொழட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஹள்ரத் அபூகதாதா (ரளி) நூல் : புகாரி (444)

“தஹிய்யத்துல் மஸ்ஜித்” (பள்ளிவாசலின் காணிக்கை) தொழுகை இரண்டு ரக்அத்தை அமர்வதற்கு முன்பே தொழுக வேண்டும். இது ஒரு ஒழுக்கமாகும். இந்த ஒழுக்கங்களை கடைபிடிக்க அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள்புரிவானாக !




( மவ்லவீ எஃப். ஜமால் பாகவி, நெல்லை – 4 )

இல்லறம் நல்லறமாக அமைய...

இல்லறம் நல்லறமாக அமைந்தால் நமது சமுதாயம் சலனமில்லாமல் இயங்கும். இல்லறமும் நம்முடைய சமூகமும் ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையது. ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் போல. இல்லறம் சரியாக இயங்கினால் தான், நமது சமூகம் முறையாக இயங்கும். நாம் எத்தனையோ சகோதரர்களையும், சகோதரிகளையும் பார்க்கின்றோம்.

இல்லற வாழ்வில் இனிமை இல்லாது, சரியான தெளிவு இல்லாது தங்களுடைய வாழ்க்கையைச் சீரழித்துக் கொண்டு இருக்கின்றார்கள். பசுமையான பூமியில் தான் பயிர்கள் விளையும், கரடு முராடான பூமியில் முற்செடிகள்தான் விளையும். பசுமை நிலத்தைத் தேர்வு செய்வதும், பாழ்பட்ட நிலத்தைத் தேர்வு செய்வதும் நம் கையில்தான் உள்ளது. நாம் அதற்குக் கொடுக்கின்ற முக்கியத்துவத்தைப் பொறுத்துத்தான் இருக்கின்றது. இஸ்லாம் நமக்கு இல்லறம் பற்றிய நல்ல வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

அவ்வகையில் அல் குர்ஆன் கணவன்-மனைவி உறவை ஆடைக்கு ஒப்பிடுகின்றது.

“மனைவியர்களான அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், கணவர்களாகிய நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள். (அல் குர்ஆன் 2:187)

மேற்கூறிய வசனம் கணவனை மனைவியின் ஆடை என்றும், மனைவியை கணவனின் ஆடை என்றும் கூறுகின்றது. ஆடை மாறுவது போல நமது துணையை மாற்றுவது என்று இதற்கு நாம் விளக்கம் கொள்ள முடியாது. நம் மானம் காக்கும் ஆடையைத் தேர்ந்தெடுக்க நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை சற்று யோசித்துப் பார்த்தால் ‘ஆடை’ என்ற உவமை கணவன்-மனைவி உறவுக்கு எந்த அளவுக்கு ஒத்துப் போகின்றது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

வாழ்க்கைத் துணையில்லாத நிலை ஆடையற்ற வாழ்வுக்கு சமானமாகும். நாம் ஆடையைத் தேர்ந்தெடுக்கும் போது பலவிதமான அம்சங்களைக் கவனத்தில் கொள்கிறோம். நாம் தேர்ந்தெடுக்கும் ஆடை நமக்கு ஏற்றதாக, அளவாக, அழகைத் தருவதாக இருக்க வேண்டும் என்பதில் அனைவரின் மன நிலையும் ஒன்றுதான்.

கூலி வேலை பார்க்கும் ஒருவன் ஆயிரக்கணக்கில் விலையுள்ள ஓர் ஆடையைத் தேர்வு செய்வதில்லை. தன் வருமானத்திற்கும் தனக்கும் ஏற்றாற்போல் தான் தேர்வு செய்வான். மூட்டை தூக்கி வேலை செய்யும் ஒருவன் கோட்-சூட்டை வாங்க முற்படுவதில்லை, அப்படிச் செய்தாலும் அவனால் அதைப் பேணிக் காக்கவோ அல்லது அதற்கு ஏற்றவாறோ அவனால் வாழ இயலாது.

கோட்-சூட் அணியும் ஒருவர் பேருந்தில் பயணம் செய்ய இயலாது, தன் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென வாடைகைக்கு வண்டி எடுத்துச் செல்லும் நிலைக்கு தள்ளப்படுவார். நம் நிறம், தொழில் என்பவற்றுக்கெல்லாம் ஏற்றாற்போல் நம் ஆடையைத் தேர்வு செய்யும் நாம் இத்தனை முனைப்புடன் செயல்படுகிறோம் என்றால் நம் வாழ்க்கை ஆடையாகிய துணையைத் தேர்ந்தெடுக்க நாம் எத்தனை முனைப்புடனும் கவனத்துடனும் செயல்படவேண்டும்.

சிலர் தங்கள் தகுதியை மறந்து தகுதிக்கு மீறிய ஒருவரைத் துணையாக தேர்ந்தெடுப்பர், அதனால் வரும் பின் விளைவுகளை சற்றும் யோசிக்கமால் செய்யும் தவறால், அந்த வாழ்க்கை எப்பொழுதும் போராட்டத்திலும், நிம்மதியற்ற நிலைமையிலும் அமையும்.

எடுத்துக்காட்டாக, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஒருவன் வசதி படைத்த பெண்ணை திருமணம் முடிக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது என்றால், அவள் பணக்கார வாழ்க்கையை வாழ கற்று இருப்பாள், தன் பணக்கார வாழ்க்கையில் தன் தகுதிக்கு இணையான நண்பர்களுடன் சகஜமாகப் பழகி கற்று இருப்பாள், ஆனால் இவனால் அவளது தகுதிக்கு ஏற்ப செலவு செய்ய முடியாமலும், அவளின் நண்பர்களுடன் சரி சமமாகப் பேசிப் பழக முடியாமலும் மோசமான நிலைக்கு ஆளாக்கப்படுவான்.

அது இவனாக இருந்தாலும், இவளாக இருந்தாலும் சமமே! இவ்வாறான சூழ்நிலையில் வாழ்பவர்களின் இல்லறம் இனிமையாக அமைய வாய்ப்பில்லை. இப்படி பல இக்கட்டுகளுடன் வாழும் ஒருவரது இல்லறம் இனிமையானதாக இருக்காது. கணவன், மனைவி என்னும் வாழ்க்கை ஆடையைத் தேர்வு செய்யும்போது பெரிதும் நிதானம் தேவை.

“ஒரு பெண் நான்கு காரணங்களுக்காக திருமணம் முடிக்கப் படுகின்றாள்,

1. அவளது பணத்திற்காக

2. அவளது குடும்ப கெளவரவத்திற்காக

3. அவளது அழகுக்காக

4. அவளது மார்க்கத்திற்காக

“நீ மார்க்கம் உடையவளைப் பற்றிக் கொள், உன் கரத்தை அழிவிலிருந்து பாதுகாத்துக் கொள்வாய்” என நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள், எனவே நம்மை அழிவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மார்க்கமுடைய பெண்ணைத் தேர்வு செய்வோமாக!

ஒருவரின் மானத்தைக் காப்பது தான் ஆடையின் அடிப்படை அம்சம். ஆனால் ஆடையை நாம் மானத்தைக் காக்க மட்டுமல்ல, நமக்கு அழகைத் தரக் கூடியதாக, அந்தஸ்தைத் தரக் கூடியதாக, இயற்கை கால வகைகளுக்கு ஏற்றாற்போல் சூடு, குளிர் என்று பிரித்து பார்த்து தான் தேர்வு செய்கின்றோம்.

இது நாம் உடுத்தும் உடைக்கு மட்டுமல்ல, நம் வாழ்க்கைத் துணைக்கும் பொருந்தும். வெறுமனே பாலியல் உணர்வுகளுக்கு வடிகால் அமைப்பது மட்டும் இல்லறத்தின் நோக்கமல்ல! ஏன் இன்னும் சில ஆண்கள் அந்த உணர்வுகள் கூட தனக்கு மட்டுமே சொந்தமானது என்று வரம்பு மீறுவார்கள், “மிருகங்கள் போல உங்கள் மனைவியரிடத்தில் செல்லாதீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

மிருகங்கள் தான் தங்களுடைய தேவைகளை மட்டும் தீர்த்துக் கொண்டு போய் விடும். மனைவி கணவனுடைய உணர்வுகளையும், கணவன் மனைவியின் உணர்வுகளையும் மதித்தும், அறிந்தும் நடந்து கொள்ள வேண்டும். இவர் என் கணவர் என்று சொல்வதன் மூலம் ஒரு பெண்ணுக்கு சமூகத்தில் பாதுகாப்பும், மகிழ்ச்சியும் ஏற்பட வேண்டும்.

இவன் தான் உன் கணவனா என்று அவளுக்கு அவமானத்தையோ, அசிங்கத்தையோ அல்லது இவனின் மனைவி என்றால் எப்படி வேண்டுமென்றாலும் வளைத்துப் போடலாம் என்ற பாதுகாப்பற்ற சூழ்நிலையையோ ஒரு பெண் சந்திக்கும் நிலைமையை உருவாக்கக் கூடாது. அதே போல் இவளா உன் மனைவி என்று பார்ப்பவர்கள் ஒரு ஆண் மகனைக் கேவலப்படுத்தும் அளவில் மனைவியும் அமைந்து விடக் கூடாது.

இல்லற வாழ்வில் ஏற்படும் சிறு சிறு பிரச்னைகளுக்கு ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டோ, விட்டுக் கொடுத்தோ நடந்து கொள்ள வேண்டும், இது செய்தால் குற்றம், இது சரியில்லை, அது சரியில்லை என்று தொட்ட தொண்ணூறுக்கும் குறை சொல்வதால் தங்கள் வாழ்க்கை தான் பாதிக்கப்படுகிறது என்பதை இருவரும் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

ஒருவரை மாற்றி ஒருவர் தங்கள் குடும்பத்தின் மீதோ அல்லது குடும்ப நபர்களின் மீதோ அவசியமில்லாத வார்த்தைகளை விட்டு அவர்கள் அத்தனை காலம் ஒட்டி உறவாடியவர்களைப் பற்றிப் பேசி அவர்களின் அன்பைச் சீண்டிப் பார்ப்பதால் வீண் வாக்குவாதமும், அவசியமற்ற பிரச்னைகளும் வருவதைத் தவிர்க்க வேண்டும்.

பிரச்னை வரும் போது ஒருவர் நெருப்பாக இருந்து கோபப்படும்போது மற்றொருவர் பஞ்சாக இருந்து பிரச்னையை வலுப்படுத்தாமல், நீராக இருந்து அணைக்க வேண்டும். இவ்வாறு ஒருவரையொருவர் அறிந்து செயல்பட்டால் இல்லறம் இனிமையாக செயல்படும்.

“எந்தவொரு முஃமினான ஆணும், முஃமினான தன் மனைவியிடம் காணப்படும் சிறு சிறு குறைகளுக்காக அவளைப் பிரிந்துவிட வேண்டாம். அவளிடம் ஏதேனும் ஒன்றை அவர் வெறுத்தால் அவளிடம் இருக்கும் நல்லதைக் கண்டு திருப்தி அடையட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள்.கூறுகிறார்கள்.

கணவன் மனைவியைப் பற்றி, இவள் ஒழுக்கமற்றவள், இவள் படிப்பற்றவள், சரியான முறையில் பேசவோ அல்லது பழகவோ தெரியாது என்றும், மனைவி இவன் கையாலாகாதவன், முரடன், கோபக்காரன், கஞ்சன் என்று பல வசைகளைப் பாடி ஒருவரையொருவர் அசிங்கப்படுத்திக் கொள்ளக்கூடாது.

தன் திருமண வயது வரும் வரை எப்படியோ திரியும் ஒரு வாலிபன், மனைவி என்று ஒருத்தி வந்த பின்தான் இந்தச் சமுதாயத்தில் தனக்கென்று ஓர் அந்தஸ்தை, தன் பொறுப்பை, கடமைகளை உணர்கின்றான். ஒரு பெண்ணும் பிறந்ததிலிருந்து தன் பெற்றோர், சகோதர, சகோதரி என்று பல உறவுகளுடன் பல வருடங்கள் வாழ்ந்த அவள் கணவன் என்ற ஒற்றை உறவுக்காக அனைவரையும் பிரிந்து, யார் என்று தெரியாத ஒரு வீட்டிற்கு அவளை அழைத்துச் செல்ல வைப்பது கணவன் என்ற அந்த ஒற்றை நூல்தான்.

எல்லா உறவுகளையும் பிரிந்து வரும் மனைவியை தன் பெற்றோர்களோ, சகோதர, சகோதரிகளோ வரம்பு மீறும்போது தட்டிக் கேட்பது கணவனின் கடமை, மனைவியும் தன் பொறுப்புகளை உணர்ந்து சிறப்பாக நடந்து கொள்வது அவளுக்கு உள்ள பொறுப்பாகும்,

இது இருவருக்குள் மட்டும் ஏற்படும் உறவல்ல, அவர்களது குடும்பத்தில் உள்ள அனைவரின் பங்களிப்பும், எல்லாவற்றையும் விட மேலாக வல்ல இறைவனின் பங்களிப்பும் உள்ளது என்பதை இருவரும் மனதில் கொள்ள வேண்டும், ஓர் இல்லறத்தில் இணையும் இருவரும், ஒருவருக்கொருவர் நடந்து கொண்ட விதங்களைப் பற்றி நம் நிரந்தர வாழ்க்கையான மறுமையில் அல்லாஹ்வால் கேள்வி எழுப்பப்படும் என்ற அந்த மகத்தான நாளை எண்ணிப் பார்த்தால், மலை போல கோபமும், கடுகாய் மாறும்.

ஒரு நிறுவனத்திற்கு ஒரு தலைமை மட்டுமே இருக்க முடியும், அப்படிப்பட்ட தலைமை நீதி, நேர்மை, நியாயம் என்று எந்தச் சூழ்நிலையிலும் தவறாமல் நடந்தால் இல்லறம் என்ற படகு இனிமையான பாதியை நோக்கிச் செல்லும்,

1. தனக்கொரு நியாயம், தன் துணைவிக்கு ஒரு நியாயம்,

2. தாய்க்கு ஒரு நீதி, தாரத்திற்கு ஒரு நீதி.

3. தன் குடும்பத்திற்கு அன்பும், துணைவியின் குடும்பத்திற்கு வெறுப்பும்.

என்று பாகுபாடு காட்டப்பட்டால் உங்கள் அருமை மனைவியை அன்பால் கட்டிப் போட இயலாது.

கணவன் என்ற தலைமையை மனைவி புரிந்தும், அனுசரித்தும் நடந்து கொள்ள வேண்டும், கணவனாகிய ஆண் மகனும், பெண் என்றால் வீட்டு வேலைகள் பார்க்கவும், தன் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் உள்ளவள் என்று துச்சமாக எண்ணாமல் நபி (ஸல்) அவர்கள் வாழ்க்கையில் பின்பற்றிய வழிமுறைகளைப் பின்பற்றி நியாயத்துடனும், அவர்களின் ஆலோசனைகள் கேட்டும் நடந்துக் கொண்டால் நம் குடும்பமும், இந்தச் சமுதாயமும் சிறந்து விளங்கும்.

நாம் பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுக்கும் ஆடையை ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் சரி செய்து மீண்டு அணிந்து கொள்ள எல்லா முயற்சிகளையும் எடுக்கின்றோம், ஆனால் அதையே ஏன் வாழ்க்கை என்ற ஆடையில் பின்பற்ற மறுக்கின்றோம்? சிறு சிறு பிரச்னைகளுக்கும், வாக்குவாதங்களுக்கும் இன்று நம் தலைமுறைகள் தேர்ந்தெடுக்கும் முடிவு “தலாக்” என்ற மிகப் பெரிய முடிவாகும்.

“ஆகுமான செயல்களில் எந்தச் செயலும் அல்லாஹ்விடம் தலாக்கை விட அதிகக் கோபமளிப்பதாக இல்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

இன்ஷா அல்லாஹ் ஓர் இனிமையான வாழ்வைத் தேர்ந்தெடுத்து, பொறுமையைக் கையாண்டு, நம் இல்லறத்தை இனிமையானதாக ஆக்கிடுவோம்.

அரஃபா முஜீப்
Thoothu Online

Tuesday, June 21, 2011

ஜிஹாத் (தியாகம்)

                                                      ஜிஹாத் (தியாகம்)

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....

                     நாங்கள் இறைநம்பிக்கை (ஈமான்) கொண்டு விட்டோம் என்று நாட்டுப்புறத்து அரபிகள் கூறுகிறார்கள். நீங்கள் இன்னும் ஈமான் கொள்ளவில்லை; வேண்டுமானால் இஸ்லாமை ஏற்றுக் கொண்டுள்ளோம் என்று கூறிக் கொள்ளுங்கள். உங்களுடைய உள்ளங்களில் ஈமான் இதுவரைக்கும் நுழையவே இல்லை!’ (குர்ஆன் 49:14)


                               ‘இறைவனின் மீதும், இறைத்தூதரின் மீதும் நம்பிக்கை கொண்டு, பிறகு அதில் கொஞ்சம்கூட சந்தேகம் கொள்ளாமல், தங்களுடைய பொருட்களாலும் உயிர்களாலும் அல்லாஹ்வுடைய பாதையில் ஜிஹாத் செய்கிறார்களே அவர்கள்தாம் ஈமான் கொண்ட — இறைநம்பிக்கையாளர்கள் — முஃமின்கள். இன்னும் அவர்கள் தாம் உண்மையாளர்கள்!’ (குர்ஆன் 49:15)
 
இறைத்தூதர் (ஸல்) கூறியாதாக அபுஹுரைரா (ரழி) அறிவிக்கிறார்:
 
                           இறைவனின் பாதையில் போரிடாமல், போரிட வேண்டும் என்கிற ஆர்வத்தையும் மனதில் கொள்ளாமல் யாரேனும் ஒருவர் இறந்து விட்டால் அவருடைய மரணம் ஒருவகை (முனா ஃபிக்கின்) நயவஞ்சகனின் மரணமாகவே கருதப்படும்.

Sunday, June 19, 2011

 ''நீங்களும் உங்கள் மனைவியரும் மகிழ்ச்சியோடு சுவர்க்கத்தில் நுழையுங்கள்......

        கணவன் மனைவி உறவு மனித வாழ்க்கையின் மற்றெல்லா உறவுகளையும் விட மிக ஆச்சர்யம் தரத்தக்க உறவு எனலாம். யார் யாருக்கோ பிறந்தவர்கள் திருமணத்திற்குப் பிறகு திடீரென்று இணைந்த பின்னர் இருவரது உள்ளங்களிலும் பெருக்கெடுக்கும் காதல், பிரியம், நெருக்கம், தாம்பத்யம், கருணை, கனிவு, பரிவு, விட்டுக் கொடுத்தல் முதலானவற்றிற்கு நிகரில்லை. அதற்கான காரணம் என்ன என்றும் நாம் அறிய முனைவதில்லை.
                          கணவன் மனைவி உறவைப்பற்றி குர்ஆனை விட சிறப்பாக யார் தான் கூறிவிட முடியும்? அந்த உறவின் இனிமையைப் பற்றி, அது இருக்க வேண்டிய நெருக்கத்தைப்பற்றி பேரறிவாளன் அல்லாஹ்வின் வர்ணனைகளை....இவ்வளவு நிகரற்ற உணர்வலைகள் இருவரது உள்ளங்களிலும் சுரந்து பெருகி பெரு வெள்ளமாய் அவர்களது வாழ்வை வளமாக்க அவர்களது படைப்பாளன் கருணைமிக்க அல்லாஹ்தான் தனது அளப்பரிய அன்பாலும், நிகரற்ற அருட்கொடைகளாலும், தனது பேராற்றல் மிக்க நுண்ணறிவாலும் காரண கர்த்தாவாக இருக்கின்றான் எனும் உண்மையை அல்-குர்ஆன் எடுத்தியம்புவதை..... இக்கட்டுரைக்குள் தேடுங்கள்.
அல்லாஹ் தன்னந்தனியாக இருந்தான். தன்னுடைய சக்திகளை வெளிப்படுத்த வேண்டுமென நாடினான். தன்னைத்தான் அறிவதற்காக ஓர் அற்புதமான சிருஷ்டியை படைக்க நாடினான். தன் கற்பனையில் உருவானபடி மனிதனைப் படைத்தான். படைத்துத் தன் பிரதிநிதியாக, கலீஃபாவாக பூமியில் ஆக்கினான். ஆணைப் படைத்த இறைவன் ஆணுக்குத் துணையாகப் பெண்ணையும் படைத்தான். அதுவும் ஆணின் விலா எலும்பிலிருந்தே பெண்ணைப் படைத்தான். படைக்கப்பட்ட ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் விரும்ப வேண்டுமென நாடினான். எனவே, பெண்ணிடத்தில் ஒரு கவர்ச்சியை வைத்தான். ஆணிடத்தில் கம்பீரத்தை வைத்தான். ஆகையால் ஆண் பெண்ணை விரும்புகிறான். பெண்ணும் ஆண்மையை விரும்புகிறாள்.விரும்பி ஆண்-பெண் இருவரும் இணைய வேண்டும் என்ற காரணத்தினால், ‘அல்லாஹ் உங்களிலிருந்தே உங்களுக்காக மனைவிகளைப் படைத்திருக்கிறான். அன்றி உங்கள் மனைவிகளிலிருந்து சந்ததிகளையும் பேரன். பேத்திகளையும் உற்பத்தி செய்து, உங்களுக்கு நல்ல ஆகாரங்களையும் புகட்டுகிறான் (ஸூரத்துன் நஹ்ல்: 72) என்று கூறுகிறான்.
உங்களுக்காக உங்களிலிருந்தே (உங்கள் மனைவிகளை அல்லாஹ் படைத்துள்ளான். நீங்கள் அவர்களிடம் மன அமைதியுறுவதற்காக உங்களுக்கிடையில் அன்பையும், நேசத்தையும் உண்டு பண்ணியுள்ளான்.’ (ஸூரத்துர் ரூம்: 21)
எவர் இறைவனுக்காக (அவனின் விதிகளுக்குக் கட்டுப்பட்டு) திருமணம் முடித்தாரோ, அவருக்கு அல்லாஹ் மறுமை நாளில் அரசாங்கத்தின் கிரீடத்தை சூட்டுகிறான்என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அறிவிக்கின்றார்கள். கிரீடம் சூட்டப்படும் இடம் எதுவாக இருக்கும் சுவனத்தைத்தவிர!
ادْخُلُوا الْجَنَّةَ أَنتُمْ وَأَزْوَاجُكُمْ تُحْبَرُونَ
''நீங்களும் உங்கள் மனைவியரும் மகிழ்ச்சியோடு சுவர்க்கத்தில் நுழையுங்கள் (என்று மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்).'' (அல்குர்ஆன்: ஸூரா அல்-ஜுக்ருஃப் 43:70)

               திருமணத்தின் மூலம் நீங்கள் வெறும் மனைவியை மட்டும் பெறுவதில்லை. அன்றிலிருந்து உங்கள் வாழ்வின் இறுதிவரை அனைத்திலும் அவள்தான் உங்கள் வாழ்க்கைத் துணைவி! இல்லத்தரசி! பங்காளி! வாழ்வின் நீண்ட பயணத்தின் வழித்துணை! எதிலும் எஃகு போன்று நின்று அரவணைத்து நிற்பவள்! நீங்கள் ஏற்றம் பெற உற்ற தோழியாய் நிழலாய் வலம் வருபவள்! .
அன்று முதல் அவள்தான் உங்களுடைய ஒவ்வொரு நொடியையும், நாளையும், வருடத்தையும், சுகத்தையும், சுவையையும், துக்கத்தையும், கனவையும், நனவையும மகிழ்வையும், கவலையையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறவள்.
நீங்கள் நோயுறும்போது, அவள் உங்களை மிகுந்த அக்கறையுடன் கவனித்துக் கொள்வாள். உங்களுக்கு ஏதேனும் தேவை என்றாலும் ஓடோடி வருபவளும் அவள்தான்.
உங்களுடைய ரகசியங்களை அவள் பாதுகாப்பாள். உங்களுக்கு ஆலோசனைகள் தேவைப்படும்போது அவள்தான் உங்கள் முக்கிய மந்திரி.
உங்கள் மனைவிதான் உங்களுடன் எப்போதும் உடன் இருப்பவள். காலையில் நீங்கள் கண் விழிக்கும்போது உங்கள் கண்கள் பார்க்கும் முதல் காட்சி அவளுடைய கண்களாகத்தான் இருக்கும். அன்றைய தினம் முழுவதும் அவள் உங்களுடன் இருப்பாள்.
        சில சந்தர்ப்பங்களில் உடலால் உங்களருகில் அவள் இருக்க முடியாமல் போகும்போது அவளது நினைவுகள் உங்களை சூழ்ந்திருக்கும். காரணம் அவளது ஆன்மா, மனம், இதயம் மூன்றும் இறைவனிடம் உங்களுக்காக பிரார்த்தித்துக் கொண்டிருக்கும்.ஒவ்வொரு நாளின் முடிவில் நீங்கள் படுக்கைக்கு போகுமுன் நீங்கள் கடைசியாகப் பார்ப்பது அவளது கண்களாகத்தான் இருக்கும். உறங்கிய பிறகும் உங்கள் கனவிலும் அவள் வலம் வருவாள். சுருக்கமாகச் சொன்னால் அவள் தான் உங்கள் உலகம்! நீங்கள்தான் அவளது உலகம்!
            கணவன் மனைவி உறவைப்பற்றி குர்ஆனை விட சிறப்பாக யார் தான் கூறிவிட முடியும்? அந்த உறவின் இனிமையைப் பற்றி, அது இருக்க வேண்டிய நெருக்கத்தைப்பற்றி பேரறிவாளன் அல்லாஹ்வின் வர்ணனைகளை பாருங்களேன்!
هُنَّ لِبَاسٌ لَّكُمْ وَأَنتُمْ لِبَاسٌ لَّهُن
அவர்கள் உங்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள், நீங்கள் அவர்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள் (ஸூரா அல்-பகரா 2:187).

                          எவ்வளவு எதார்த்தமான உவமை! ஆம் உண்மையில் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் ஆடைகளைப் போன்றவர்கள். காரணம் ஆடைகள் மனிதனின் மானத்துக்கும், உடலுக்கும், பாதுகாப்பை அளிக்கின்றன.மரியாதையையும், மாண்பையும் தருகின்றன. அழகையும், கவர்ச்சியையும் வழங்குகின்றன. கடும் பனிப் பிரதேசத்தில் பயணிக்கும் பிரயாணிக்கு அவனது ஆடை எந்த அளவுக்கு சுகத்தையும், பாதுகாப் பையும் தரும் என்று கொஞ்சம் கற்பனை செய்து பார்த்தாலே அதன் அருமை புரியும்.அந்த அளவுக்கு நமது வாழ்க்கைப் பாதையில் நமக்கு சுகத்தையும், பாதுகாப்பையும், கண்ணியத்தையும் வழங்குபவள் மனைவி தான்.இந்த உறவு மனித வாழ்க்கையின் மற்றெல்லா உறவுகளையும் விட மிக ஆச்சர்யம் தரத்தக்க உறவு எனலாம். திருமணத்திற்குப் பிறகு திடீரென்று இணைந்த இருவரது உள்ளங்களிலும் பெருக்கெடுக்கும் காதல், பிரியம், நெருக்கம், தாம்பத்யம், கருணை, கனிவு, பரிவு, விட்டுக் கொடுத்தல் முதலானவற்றிற்கு நிகரில்லை. அதற்கான காரணம் என்ன என்றும் நாம் அறிய முனைவதில்லை.இவ்வளவு நிகரற்ற உணர்வலைகள் இருவரது உள்ளங்களிலும் சுரந்து பெருகி பெரு வெள்ளமாய் அவர்களது வாழ்வை வளமாக்க அவர்களது படைப்பாளன் கருணைமிக்க அல்லாஹ்தான் தனது அளப்பரிய அன்பாலும், நிகரற்ற அருட்கொடைகளாலும், தனது பேராற்றல் மிக்க நுண்ணறிவாலும் காரண கர்த்தாவாக இருக்கின்றான்.  

இந்த உண்மையை அல்-குர்ஆன் இந்த வசனத்தில் உணர்த்துகிறது
وَاللّهُ جَعَلَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا
மேலும், அல்லாஹ் உங்கள் வாழ்க்கைத் துணைகளை உங்களிலிருந்தே உண்டாக்கினான். (ஸூரா அல்-நஹ்ல் 16:72)
                  அல்லாஹ் இதன் மூலம் அவனது அத்தாட்சிகளை இந்த பிரபஞ்சத்தில் தேடுவோருக்கு இந்த உணர்வுகள் அவனது அத்தாட்சிகளில் உள்ளவைதான் என்று உணர்த்தி அவனது வல்லமையை மனிதர்கள் உணர்வதற்காக கீழ்க்கண்ட வசனத்தில் சொல்கின்றான்:
وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِّتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ
மேலும் அவனது அத்தாட்சிகளில் ஒன்று, அதாவது அவன்தான் உங்களுக்கு துணைகளை உங்களிலிருந்தே ஏற்படுத்தினான், நீங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து நடந்துக் கொள்ள வேண்டுமென்பதற்காக, உங்கள் உள்ளங்களில் அன்பையும் கருணையையும் பெருகச் செய்தான். நிச்சயமாக, அறிவுடையோருக்கு இதில் தெளிவான அத்தாட்சி இருக்கிறது
(ஸூரா: அல்-ரூம் 30:21).

                             ஆனால், அல்லாஹ்வுக்கு மனிதனின் மனநிலையைப் பற்றி நன்கு தெரியும். அது நீண்ட காலம் ஒரே நிலையில் இருக்காது, அடிக்கடி அதன் தன்மைகள் மாறும. உணர்வுகள் வேறு வடிவம் பெறும். ஏன்! காலம் ஓட ஓட காதல் கூடக் கசக்கத் துவங்கும். முறையான கவனம் செலுத்தப்படவில்லை என்றால் திருமண பந்தம் தொய்வடையக் கூடும்.நமது முயற்சி இல்லாமல் இல்லறத்தில் எந்த நேரமும் மகிழ்ச்சி நிறைந்திருக்குமென்று எண்ணிவிடக்கூடாது. நாம் அரும்பாடு பட்டுக் கட்டிய அந்த இல்லறக் கூட்டில் மகிழ்ச்சி நிரந்தரமாக நிலைத்திருக்க வேண்டுமென்றால் கணவன் மனைவி இருவரது கூட்டுப் பங்களிப்பு மிக மிக அவசியம்.திருமண பந்தம் என்ற மரம் தழைத்தோங்கி வளர வேண்டுமென்றால், செடியை ஊன்றி விட்டால் மட்டும் போதாது, அந்த மரம் வளரவேண்டிய மண்ணுக்கு உரமிட்டு, நீரிட்டு பராமாரித்து, பாதுகாக்கப்பட்டால் தான் முடியும்.பெருமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது சீரிய பணிகளுக்கிடையேயும் தமது இல்லற வாழ்வின் மகிழ்ச்சிக்காகவும் நேரம் ஒதுக்கிய சம்பவங்களை நினைவு கூர்ந்து பாருங்கள்.தங்களது மனைவி ஆயிஷா அவர்களை பாலை வெளியில் அழைத்துச் சென்று தங்களுக்குள் ஓட்டப்பந்தயம் வைத்தார்கள். அதில் அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா வென்றார். ஆனால் சில காலத்திற்குப் பிறகு அன்னையாருக்கு எடைகூடிய காரணத்தால் அவர்களை நபியவர்கள் வென்றார்கள்.மேலும் தங்களது மனைவியை எத்தியோப்பிய இளம் வீரர்களின் வீர விளையாட்டுக்களை காண அழைத்துச் சென்றிருக்கிறார்கள். உங்களது மனைவியைப் பற்றி நீங்கள் கொண்டிருக்கும் அன்பை அடிக்கடி வெளிக்காட்டுவது, உறவை மேலும் மேலும் பலப்படுத்த உதவும்.நீங்கள் உங்கள் மனைவி மீது செலுத்தும் அன்புக்கு அல்லாஹ் கூலி கொடுக்கத் தவறுவதில்லை என்ற உண்மையை எண்ணிப்பாருங்கள். அதனால் தான் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:

                               அல்லாஹ்வின் மகிழ்ச்சியை நாடி நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் நற்கூலி உண்டு, ஒரு கவள உணவாயினும்உங்கள் மனைவியின் வாயில் நீங்கள் அன்போடு ஊட்டி விடுங்கள்.
                        ஆகவே, நீங்கள் செய்யக்கூடிய சின்னஞ்சிறு அன்பான காரியங்களைக் குறைவாக மதிப்பிட்டு விடாதீர்கள். மனைவிக்கு உணவு ஊட்டி விடுவது, வாகனங்களில் அவர்கள் ஏற உதவுவது போன்ற சிறுசிறு விசயங்களா யினும் சரியே. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தங்களது மனைவி ஒட்டகத்தில் ஏறி அமர தங்களது கால் முட்டியை மடித்து அமர்ந்து உதவி இருக்கிறார்கள் அல்லவா?அடிக்கடி இருவரும் சேர்ந்து அல்லாஹ்வை வணங்குவதில் ஈடுபட முயற்சி எடுத்துக்கொள்ளுங்கள். வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக இரவில் விழித்தெழும் தம்பதியர்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்த்தியிருக்கிறார்கள். மேலும் முதலில் எழும் தம்பதியரில் ஒருவர் மற்றொருவரை விழிக்கச் செய்வதற்காக குளிர்ந்த நீரை முகத்தில் தெளிக்கத் தூண்டி இருக்கின்றார்கள்.எப்போதும் சொல்லாலும் செயலாலும் உங்கள் மனைவியரிடம் நல்  லவிதமாக நடந்துக் கொள்ள மிகுந்த முயற்சி எடுத்துக் கொள்ளுங்கள். மலர்ந்த முகத்துடன் அவர்களிடம் எப்போதும் பேசுங்கள், குடும்ப விசயங்களில் அவர்களது ஆலோசனைகளை கேட்டுப் பெறுங்கள், பிற விஷயங்களிலும் அவர்களது அபிப்ராயங்களை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அவர்களுடன் இருந்து அளவளாவ நிறைய நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்ன பொன்மொழிகளை மறந்து விடாதீர்கள்.
                              ''உங்களில் மிகச் சிறந்தவர் தங்களது மனைவியரிடம் மிகச் சிறந்தவர் என்று பெயர் எடுப்பவர்தான்''.இறுதியாக, தம்பதியர் இணங்கி; இருப்பதும், தங்களது மரணம் வரை ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு செலுத்தி வாழ்வதும் இயல்புதான் என்றாலும், அது போதாது. உங்கள் மனைவியிடம் அன்புடன் நடந்து கொண்டால் மட்டும் போதாது, அவர்கள் விரும்புவதை எல்லாம் நீங்களும் விரும்ப வேண்டும். அவர்களது குடும்பத்தினர் மற்றும் அவர்களது அன்புக்குப் பாத்திரமான ஒவ்வொருவரும் உங்கள் அன்புக்குப் பாத்திரமானவர்களாக ஆக வேண்டும்.விருந்தினர்களாக உங்கள் மனைவியரின் குடும்பத்தினரோ, அவர்களுக்கு விருப்பமானவர்களோ உங்கள் இல்லத்திற்கு வந்தால் அவர்களை வரவேற்கும் முதல் நபராக நீங்கள் இருக்க வேண்டும். இதற்கும் மேலாக ஒரு விஷயம் இருக்கிறது. உங்களது மரணம் வரை அவர்களை விரும்பினால் மட்டும் போதாது, அவர்களை நீங்கள் விரும்புவது உண்மையென்றால் மரணத்திற்குப் பிறகும் அவர்கள் உங்களது மனைவியராக இருக்க விருப்பம் கொள்ள வேண்டும்.நாம்தான் மரணத்திற்குப் பிறகும் நிரந்தர வாழ்க்கை இருப்பதை நம்பிக்கை வைத்துள்ளோமே. இவ்வுலகில் நல் அமல்களை செய்தோர் தங்களது வாழ்க்கைத் துணைவியருடனும், தங்களது பிள்ளைகளுடனும் சொர்க்கம் புகுவார்கள்.

ஸூரா அல்-ஜுக்ருஃப் 43:70 ல் அல்லாஹ் சொல்வதைப் பாருங்கள்:
ادْخُلُوا الْجَنَّةَ أَنتُمْ وَأَزْوَاجُكُمْ تُحْبَرُونَ
                        நீங்களும் உங்கள் மனைவியரும் மகிழ்ச்சியோடு சுவர்க்கத்தில் நுழையுங்கள் (என்று மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்).
இந்த வசனத்தை உண்மையாக்க நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எவ்வளவு அக்கறை செலுத்தியுள்ளார்கள் என்று பாருங்கள்:
இருபத்திஐந்து வருட காலம் தங்களது வாழ்க்கைத் துணையாக இருந்த அன்னை கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் மறைவுக்குப் பின்னரும் நீண்ட காலம் ஆகியும் அன்னையாரின் குடும்பத்தினரை நபியவர்கள் மறக்காமல் அன்பு செலுத்தி வந்தார்கள்.

                         தங்களது வீட்டில் எப்போது ஆடு அறுத்தாலும் அன்னை கதீஜாவின் குடும்பத்தினருக்கு ஒரு பங்கை அனுப்பத் தவறியதில்லை. ஓருமுறை தங்களது வீட்டின் கதவு தட்டப்படும்போது அந்த ஓசையைக் கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யா அல்லாஹ்! வந்திருப்பவர் என் மனைவி கதீஜாவின் சகோதரி ஹாலாவாக இருக்க வேண்டுமே என்று தங்களது ஆவலை வெளியிட்டார்கள்.அல்லாஹ்வின் வேதத்திலும், அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்விலும் நிச்சயம் அகிலத்தாருக்கு பற்பல படிப்பினைகள் உண்டு. இந்த அறிய படிப்பினைகளை கடைப்பிடித்து வாழ்வோமானால் ஒவ்வொருவரும் தத்தம் பிரிய மனைவியோடு; கண்கள் காணாத, காதுகள் கேட்டிராத இன்பங்கள் கொட்டிக்கிடக்கும் சுவர்க்கத்திற்குள் நுழைய இறைவன் உத்தரவாதம் அளிக்கின்றான்.  

                         மறவாதீர்கள் அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது.ஆகவே இவ்வுலகில் உங்கள் மனைவியுடன் இஸ்லாம் வகுத்துத்தந்த முறைப்படி இல்லறத்தை நல்லறமாக்கி வாழுங்கள். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன ''மனிதர்களில் சிறந்தவர் தன் மனைவியிடம் சிறந்தவரே'' எனும் அருள் மொழியை நினைவு கூறுங்கள். மனைவியிடம் நல்ல பெயர் எடுப்பது ரொம்பவும் கஷ்டம் என்கிறீர்களா? கஷ்டப்படாமல் சுவர்க்கம் கிடைத்துவிடும் என்று நினைக்கிறீர்களா? சிறந்தவர்களாகத்தானே சுவர்க்கத்திற்குச் செல்ல முடியும்! ஆகவே, கஷ்டப்பட்டேனும் நல்ல பெயர் எடுத்துவிடுங்கள், உங்கள் மனைவியிடம்! ஜோடியாக சுவர்க்கம் செல்ல அதுதான் சிறந்த வழி. அல்லாஹ் நல்லருள் புரிவானாக.
 
Thanks & Regards
Sabireen Niamathullah